4790. | கொடு நாலொடு இரண்டு குலப்பகை குற்றம்மூன்றும் சுடுஞானம்வெளிப்பட உய்ந்த துய்க்கு இலார்போல் விடநாகம்முழைத்தலை விம்மல் உழந்து,வீங்கி, நெடுநாள்,பொறைஉற்ற உயிர்ப்பு நிமிர்ந்துநிற்ப.* |
நாலொடு இரண்டுகொடும் குலப்பகை - ஆறு வகையான கொடிய பரம்பரையாக வரும் பகையையும்; குற்றம் மூன்றும் - மூன்று குற்றத்தையும்; சுடுஞானம் - அழிக்கின்ற ஞானமானது; வெளிப்பட - ஆன்மாவிலே தோன்ற; உய்ந்த துய்க்கு இலார்போல் - தப்பிப் பிழைத்த பற்றற்ற ஞானிகளைப் போல; முழைத்தலை நெடுநாள் விம்மல் உழந்து - மலைக் குகைகளில் நீண்ட நாட்கள் பொருமி வருந்தி; வீங்கி பொறையுற்ற - உடல் பருத்து அடங்கிக் கிடந்த; விடநாகம் - விடப் பாம்புகள்; உயிர்ப்பு நிமிர்ந்துநிற்ப - பெருமூச்சு வெளிப்பட்டு நிலைக்க; மலையின்குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையான பகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப் போல விடுதலை பெற்று உயிர்த்தன. பகை ஆறு - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பவை. முக்குற்றம் - ஐயம், திரிபு, அறியாமை. தனம், குலம், கல்விஎன்று குற்றம் மூன்று என்று பழைய உரை பேசும். வஞ்ச முக்குறும்பு - என்று இராமானுச நூற்றந்தாதி பேசும். (50) |