4791. | எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும்ஆடி உழுந்து ஓடுகாலத்திடை, உம்பரின் உம்பர்ஓங்கிக் கொழுந்துஓடிநின்ற கொழுங்குன்றை வியந்துநோக்கி, அழுங்கா மனத்துஅண்ணல் 'இது என்கொல்' எனாஅயிர்த்தான். |
அழுங்கா மனத்துஅண்ணல் - போகங்களில் தாழாதசோர்வு இல்லாத உள்ளத்தையுடைய அனுமன்; இலங்கும் ஆடி - விளங்குகின்ற கண்ணாடியின்கண்; உழுந்து ஓடுகாலத்திடை - உழுந்தானது ஒருமுறை உருள்வதற்குள்; எழுந்து ஓங்கி -கடலிலிருந்து மேலே எழுந்து; விண்ணொடு மண்ஒக்க - ஆகாயமும் பூமியும் ஒன்றாகும்படி; உம்பரின் உம்பர் ஓங்கி - மேலும் மேலும் வளர்ந்து பரவி; கொழுந்து ஓடி நின்ற - மலைச் சிகரங்கள் வளர்ந்த; கொழுங்குன்றை - மைந்நாக மலையை; வியந்து நோக்கி - ஆச்சரியத்துடன் பார்த்து; இது என்கொல் எனா அயிர்த்தான் - இப்பொருள் யாதோ என்று ஐயம் உற்றான். மைந்நாகமலை,கண்ணாடியில் உழுந்து ஒருமுறை சுழல்வதற்குள் எழுந்தது கண்டு அனுமன் இது யாதோ என்று அதிசயப்பட்டான். ஓடுதல் - சுழலுதல். ஓடுவளை திருத்தியும் என்னும் முல்லைப் பாட்டுக்கு (82) சுழலுகின்ற வளையைச் சுழலாமல் செறித்தும் என்றும் உரை கண்டனர். சம்பந்தப் பிரான், 'எழிற்கண்ணாடி உழுந்துருளும் அளவையின் ஒளி எரி கொள வெஞ்சிலை வளைத்தோன்' என்பர். (ஏரிசையும் - முதல் திருமுறை) (51) |