4797.

நற்றாயினும் நல்லன் எனக்கு இவன்
     என்று நாடி
இற்றே இறைஎய்தினை ஏய்ந்தது
     கோடி என்னால்
பொற்றார் அகல்மார்ப ! தம் இல்லுழை
     வந்தபோதே
உற்றார்செயல்மற்றும் உண்டோ ? என
     உற்றுஉரைத்தான்

     பொன்தார் அகல்மார்ப -பொன்மாலை அணிந்த விரிந்த மார்பை
உடையவனே;  இவன் - இந்த அனுமன்;  எனக்கு நற்றாயினும் நல்லன் -
என்னிடம் பெற்ற தாயைவிட அன்புடையவன்; என்று நாடி இற்றே இறை
எய்தினை
- என்று ஆராய்ந்து இங்கே சிறிது வந்து; என்னால் ஏய்ந்தது
கோடி
- என்னால் தரக்கூடியதை ஏற்றுக் கொள்வாயாக; தம் இல்உழை வந்த
போதே
- (விருந்தினர்) தம்முடைய வீட்டிற்கு வந்த உடனே; உற்றார் செயல்
மற்றும் உண்டு
- வீட்டுக்கு உரியவர்களின் செய்கை (விருந்தோம்பலைவிட)
வேறு இருக்க முடியுமோ ?; என உற்று உரைத்தான் - என்று அனுமனை
அடைந்து கூறினான்.

     நான், தாயினும்சிறந்தவன் என்று கருதி என்பால் வந்து தங்கி
என்னுடைய உபசாரத்தை ஏற்றுக்கொள். விருந்தினர் வந்தால் உபசரிப்பதை
விட இல்லறத்தார்க்கு வேறு கடமை உண்டோ என்று மைந்நாகமலை கூறிற்று.
நற்றாய் - பெற்ற தாய். கோடி - கொள்க. கொள் + தி = கோடி.       (57)