4801.

ஈண்டே கடிதுஏகி இலங்கை
     விலங்கல்எய்தி
ஆண்டான் அடிமைத்தொழில்
     ஆற்றலின் ஆற்றல் உண்டே ?
மீண்டால்நுகர்வென் நல் விருந்தென
     வேண்டிமெய்ம்மை
பூண்டானவன்கட்புலம் பிற்பட
     முன்புபோனான்
 

     மெய்ம்மைபூண்டான் - உண்மையை ஆபரணமாக அணிந்த மாருதி
(மைநாகத்தைப் பார்த்து); ஈண்டே - இப்பொழுதே; கடிது ஏகி - வேகமாகச்
சென்று; இலங்கை விலங்கல் எய்தி - இலங்கைத் தீவில் உள்ள திரிகூட
மலையை அடைந்து;  ஆண்டான் அடிமைத் தொழில் - இராமபிரானுக்கு
அடிமைப் பணியை; ஆற்றலின் ஆற்றல் உண்டே - செய்வதில் வலிமை
உள்ளதே ?; மீண்டால் - திரும்பி வந்தால்; நல் விருந்து நுகர்வேன் என
வேண்டி
- உன்னுடைய விருந்தை உண்பேன் என்று சொல்லி; அவன்
கட்புலம் பின்பட
- அந்த மைநாகனின் பார்வையானது பின்னே தொடர;
முன்பு போனான் - முன்நோக்கிப் பறந்து சென்றான்.

     யான் இலங்கையைஅடைந்து பெருமானின் பணி செய்து மீண்டால் உன்
விருந்தை ஏற்பேன் என்று கூறி அனுமன் சென்றான். இலங்கையில் உள்ள
திரிகூட மலையே இராவணனின் இருப்பிடம். 'இலங்கை வெற்பில்...
நங்கையைக் கண்டேன்' என்று பின்னே பேசப்படும். விருந்து என்பது இங்கே
உண்டியை.                                              (61)