4803. | நீர்மாக்கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்காப் பார்மேல் தவழ்சேவடி பாய்நட வாப் பதத்து என் தேர்மேல் குதிகொண்டவன் இத்திறன் சிந்தைசெய்தான் ஆர்மேல்கொல்என்று எண்ணி அருக்கனும் ஐயம்உற்றான். |
அருக்கனும் -சூரியனும்;நீர் மா கடல்மேல் - நீரைப் பெற்ற பெரிய கடலைவிடப் பெரிதாக; நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா - உயர்கின்ற உயர்ச்சியைப் பார்த்து; பார்மேல் தவழ் சேவடி - பூமியிலே தவழ்கின்ற சிவந்த பாதங்கள்; பாய் நடவாப் பதத்து - பூமியிலே பதிந்து நடவாத பருவத்திலே; என் தேர்மேல் குதி கொண்டவன் - என்னுடைய தேரிலே குதித்த இந்த அனுமன்; இத்திறன் - இப்படி; ஆர்மேல் சிந்தை செய்தான் கொல் - எவர்மேல் பாயக் கருதுகிறானோ; என்று எண்ணி - என்று கருதி; ஐயம் உற்றான் - சந்தேகம் அடைந்தான். அனுமன்கடலைவிடப் பெரிதாக வளரும் உயர்ச்சியை நோக்கிய சூரியன், தவழ்கின்ற பருவத்தில் என் தேர்மேல் பாய்ந்தான். இப்போது யார்மேல் பாய்கின்றானோ என்று ஐயம் உற்றான். பெரிய பொருளுக்கு உவமையாக்கப்படுவது கடல். அதனால் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி என்பதற்கு இங்ஙனம் கூறப்பெற்றது. (63) |