4806.
 

பேழ்வாயொர் அரக்கி உருக்கொடு
     பெட்பின்ஓங்கி
கோள்வாய் அரியின் குலத்தாய்; கொடுங்
     கூற்றும்உட்க
வாழ்வாய் எனக்குஆமிடமாய் வரு
     வாய்கொல் என்னா
நீள்வாய்விசும்பும் தனதுச்சி
     நெருக்க நின்றாள்.
 

(அந்தச் சுரசை)

     பேழ்வாய்அரக்கி உருக்கொடு - பெரிய வாயை உடையஅரக்கி
வடிவத்தை ஏற்று; பெட்பின் ஓங்கி - (மனித) ஆசைபோல் வளர்ந்து;
கோள்வாய் அரியின் - வலிமை மிக்க குரங்கின்;  குலத்தாய் - குலத்தில்
பிறந்தவனே; கொடுங்கூற்றும் உட்க - கொடுமையான யமனும் அஞ்சும்படி;
வாழ்வாய் -
வாழ்வாயாக; எனக்கு ஆமிடமாய் வருவாய் என்னா -
எனக்கு (உண்ணும்) மாமிசமாக வருவாயாக என்று; நீள்வாய் விசும்பும்  -
ஓங்கிய இடத்தைப் பெற்ற ஆகாயமும்; தனது உச்சி - தனது தலையை;
நெருக்க நின்றாள் - அணுகி நெருக்கும்படி (வளர்ந்து) நின்றாள்.

     சுரசை அரக்கிஉருவத்துடன் குரங்கு மரபில் வந்தவனே எனக்கு
உணவாய் வருவாயாக என்று கூறி நின்றாள். பேழ்வாய் - பெரியவாய் /
பிளந்த வாய் என்றும் கூறலாம். ஆமிடம் - உண்ணும் மாமிசம். யான் இனி
இதனுக்கு ஆமிடம். (கம்ப - 3664).                          (66)