4807.

தீயேஎனல்ஆய பசிப்பிணி
     தீர்த்தல்செய்தாய்
ஆயே விரைவுற்றெனை அண்மினை
     வண்மை யாள!
நீயே இனிவந்துஎன் நிணம்கொள்
     பிணங்குஎயிற்றின்
வாயே புகுவாய்; வழிமற்றிலை
     வானின் என்றாள்.

(சுரசை அனுமனைநோக்கி)

     வண்மையாள! -கொடைப் பண்புடையவனே; தீயே எனல் ஆய -
நெருப்பே என்று கூறத்தக்க; பசிப்பிணி - பசியாகிய நோயை; தீர்த்தல்
செய்வாய் ஆயே -
  நீக்குதலைச் செய்பவனாக ஆகி; விரைவுற்று எனை
அண்மினை -
விரைவாக என்னைச் சார்ந்தாய்; இனி - இப்போது; நீயே
வந்து -
நீயாக வந்து; என் நிணங்கொள் பிணங்கு - எனது கொழுப்பைக்
கொண்ட ஒன்றோடொன்று பினனியிருக்கும்; எயிற்றின் வாயே - கோரைப்
பற்களையுடைய வாயிலே; புகுவாய் -நுழைவாயாக; வானின் - ஆகாயத்தின்கண்; மாற்றுவழி இலை - வேறு வழியில்லை என்று; என்றாள்
-
கூறினாள்.

     நீ என்னுடையபசிப்பிணி தீர்க்க வந்துள்ளாய். வண்மையுடையவனே
நீயே என் வாய்ப்பக்கம் வருக என்று சுரசை கூறினாள். பிணங்கு எயிற்றில் -
ஒன்றோடொன்று பின்னிய பற்கள். எயிறு - வளைந்த பற்கள் என்றே உரை
கூறப்பெற்றது. நான்தான் உண்பேன் - நான்தான் உண்பேன் என்று தம்முள்
பிணங்கும் எயிறு என்று கூறினும் அமையும்.                     (67)