4808.

பெண்பால்ஒருநீ பசிப்பீழை
     ஒறுக்கநொந்தாய்
உண்பாய் எனதுஆக்கையை யான்உத
     வற்குநேர்வல்
விண்பாலவர்நாயகன் ஏவல்
     இழைத்துமீண்டால்
நண்பால் எனக்சொல்லினன் நல்அறி
     வாளன்; நக்காள்.
 

     நல்அறிவாளன் -நல்லஅறிவுடைய அனுமான் (சுரசையிடம்); நீ ஒரு
பெண்பால் -
நீ பெண்ணாக உள்ளாய்; பசிப்பீழை - பசியாகிய துன்பம்;
ஒறுக்க நொந்தாய் -
வருத்துவதால் துன்புற்றாய்; விண்பாலவர் நாயகன் -
விண்ணுலகத்தவரின் தலைவனான இராமபிரானின்; ஏவல் இழைத்து மீண்டால்- கட்டளையைப் புரிந்து திரும்பினால்; எனது ஆக்கையை
உண்பாய் -
(அப்போது) என்னுடைய உடலை உண்பாயாக; நண்பால்
உதவற்கு யான்நேர்வல் -
நட்புடன் வழங்க நான் உடன்பட்டேன்; எனச்
சொல்லினன் -
என்று கூறினான்; நக்காள் - (அது கேட்டவுடன் சுரசை)
ஏளனமாகச்சிரித்தாள்.

     இராமபிரானின்கட்டளையை நிறைவேற்றி மீண்ட பிறகு நீ என்னுடைய
உடம்பை உண்ணுக. நான் உனக்கு அதை வழங்குவேன் என்று அனுமன்
கூறினான். அதுகேட்ட சுரசை சிரித்தாள். இங்கே விண் என்றது பரமபதத்தை.
விண்பால் இருப்பாய் - என்னும் திருவாய்மொழிப் பாசுரத்துக்கு நம்பிள்ளை
வரைந்த உரையைப் பார்க்கவும். பீழை -துன்பம்.                 (68)