4809. | காய்ந்தேழ் உலகங்களும் காணநின் யாக்கை தன்னை ஆர்ந்தேபசி தீர்வென்இது ஆணைஎன்று அன்னாள்சொன்னாள் ஓர்ந்தானும்உவந்து ஒருவேன் நினது ஊழ்இல்பேழ்வாய் சேர்ந்தேகுகின்றேன் வலையாமெனின் தின்றிடுஎன்றான். |
அன்னாள் -அந்தச்சுரசை; ஏழ் உலகங்களும் காண - ஏழ் உலகங்களும் பார்க்கும்படியாக; நின் யாக்கை தன்னை - உன்னுடைய உடம்பை; காய்ந்து - வாட்டி; ஆர்ந்து பசிதீர்வென் - உண்டு பசியாறுவேன்;இது ஆணை என்று - இது சபதம் என்று; சொன்னாள் - கூறினாள்;ஓர்ந்தானும் உவந்து - சுரசையின் எண்ணத்தை அறிந்த அனுமானும்மகிழ்ச்சியடைந்து; ஒருவேன் - நான் விலகிப் போகமாட்டேன்; நினது -உன்னுடைய; ஊழ்இல் பேழ் வாய் - முறை முடிவற்ற பெரிய வாயை;சேர்ந்து ஏகுகின்றேன் - அடைந்து செல்லப் போகின்றேன்; வலையாமெனின் - வலிமை உடையவள் ஆனால்; தின்றிடு என்றான் - தின்பாயாக என்று கூறினான். காய்தல் -சுடுதல், வாட்டுதல். புலாலைச் சுடும் முறையைப் பேசுகின்றான். காய்ந்து என்பதற்குக் கோபித்து என்று பொருள் கூறுவதில் சிறப்பு இருந்தால் ஏற்க. சினந்து உண்ணுதல் அரக்கியர்க்கு ஏற்கும் போலும். ஆணை - சபதம். (69)
|