| 4811. | நீண்டான்உடனே சுருங்கா நிமிர்வாள் வயிற்றின் ஊண்தான் எனஉற்று ஓர் உயிர்ப்பு உயிராதமுன்னர் மீண்டான் அதுகண்டனர் விண்உறை வோர்கள் எம்மை ஆண்டான்வலன்என்றுஅலர் தூஉய் நெடிது ஆசிசொன்னார். |
நீண்டான் -வளர்ந்துஉயர்ந்த அனுமன்; உடனே சுருங்கா - சடக்கெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு; நிமிர்வாள் வயிற்றின் - ஓங்கி வளர்ந்த சுரசையின் வயிற்றில்; ஊண்தான் என உற்று - உணவு என்று சொல்லும்படி பொருந்தி; ஓர் உயிர்ப்பு உயிராத முன்னர் - அவள் ஒரு மூச்சு விடுவதற்கு முன்; மீண்டான் - வெளி வந்தான்; விண் உறைவோர்கள் - தேவர்கள்; அது கண்டனர் - அச் செயலைப் பார்த்தனர்; எம்மை ஆண்டான் வலன் என்று - எம்மைப் பாதுகாக்க வந்த அனுமன் வல்லமை உடையவன் என்று; அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் - மலர் தூவி நீண்ட ஆசி கூறினார்கள். நெடிது வளர்ந்துஉடனே சுருங்கி வயிற்றில் நுழைந்து வெளி வந்தது அனுமனது சாதுர்யத்தையும் வல்லமையையும் உணர்த்தியமையால் தேவர் மகிழ்ந்தனர். (71) |