4814.

மந்தாரம்உந்து மகரந்தம்
     மணந்தவாடை
செந்தாமரைவாள்முகத்திற் செறி
     வேர்சிதைப்ப
தந்தாம்உலகத்திடை விஞ்சையர்
     பாணிதள்ளும்
கந்தார வீணைக்களி செஞ்செவிக்
     காது நுங்க.

     மந்தாரம் உந்து- மந்தாரமரங்கள் நிரம்பிய சோலையானது
வெளிப்படுத்தின; மகரந்தம் மணந்த வாடை - மலர்த்தாதுகள் மணக்கின்ற
வாடைக்காற்று; செந்தாமரை வாள்முகத்து - செந்தாமரை போன்ற ஒளிமிக்க
முகத்தில்; செறிவேர் சிதைப்ப - மிகுந்துள்ள வேர்வையைப் போக்க;
விஞ்சையர் - வித்தியாதரர்; தம்தாம் உலகத்திடை - தங்கள் தங்கள்
உலகத்தில் இருந்து கொண்டு; பாணி தள்ளும் - தாளம் பிறழாத; கந்தார
வீணை -
கந்தாரப் பண்பாடும் பொருட்டு நரம்பு திருத்தப் பெற்ற
வீணையிலிருந்து புறப்பட்ட; களி - இசையாகிய தேனை; செஞ்செவி காது
நுங்க -
சிறப்புற்ற செவியின் துளைகள் அனுபவிக்க.

     அனுமனின்முகவியர்வையை மந்தாரச் சோலைக் காற்று போக்கிற்று.
அவனுடைய திருச்செவிகள் விஞ்சையரின் பண்ணை அனுபவித்தன. மந்தாரம்
- தேவலோகத்துத் தெய்வ மரங்களில் ஒன்று. கந்தாரம் - சுரபேதம் என்று
பழைய உரை பேசும். (அடை - பதி). காது - துளை. காதற்ற ஊசியும்
(பட்டினத்தார் பாடல்) கந்தாரம் - பண் - கந்தாரம் செய்து களிவண்டு
முரன்றுபாட (சிந்தாமணி 1959)                             (74)