அனுமன் அங்காரதாரை வயிற்றைக் கிழித்தேகல் | 4822. | திறந்தாள்எயிற்றை, அவள்; அண்ணலிடை சென்றான் அறந்தான்அரற்றியது அயர்த்தமரர் எய்த்தார் இறந்தான்எனக்கொடுஓர் இமைப்பதனின் முன்னம் பிறந்தான்எனப்பெரிய கோளரி பெயர்ந்தான். |
அவள் திறந்தாள்எயிற்றை - (அனுமனை விழுங்க)அங்காரதாரை வாயைத் திறந்தாள்; அண்ணல் - பெருமையை உடைய அனுமன்; இடை - அந்த வாயின் வழியில்; சென்றான் - போனான்; இறந்தான் எனக்கொடு - அனுமன் இறந்து விட்டான் என்று நினைத்துக்கொண்டு; அறம் அரற்றியது - அறக்கடவுள் கதறியது; அமரர் எய்த்தார் - தேவர்கள் வருந்தினர்; பெரிய கோளரி - பெரிய சிங்கம் போன்ற அனுமன்; ஓர் இமைப்பதனின் முன்னர் - ஒருமுறை கண்ணை இமைப்பதற்கு முன்பு; பிறந்தான் என - பிறந்து விட்டான்என்று கூறும்படி; பெயர்ந்தான் - திரும்பி வந்தான். அனுமன்அரக்கியின் வாயின் வழியில் வயிற்றில் புகுந்தான். அது கண்டு அறம் அரற்றியது. தேவர்கள் வருந்தினர். அப்போது அனுமன் இமைப்பதன் முன்பு பிறந்தான் என்று கூறும்படி திரும்பினான். (82) |