4824.

சாகா வரத்தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கிகுடர்கொண்டுஉடன் எழுந்தான்
மாகால் விசைக்கவடம்மண்ணிலுற வாலோடு
ஆகாயம் உற்றகதலிக்கு உவமை யானான்.

     சாகாவரத்தலைவரில் - இறவா வரம் பெற்றசிரஞ்சீவிகளில்; திலகம்
அன்னான் -
திலகம் போன்ற அனுமன்; ஏகா - அரக்கியின் வயிற்றினுள்
சென்று; உடன் - விரைவில்; அரக்கி குடர்கொண்டு - அரக்கியின் குடலை
எடுத்துக்கொண்டு; எழுந்தான் - மேலே எழுந்தான்; (அவன்) மாகால்
விசைக்க -
பெரிய காற்றடிக்க; வடம்மண்ணில் உற - கயிறானது மண்ணில்
இருக்க; வாலோடு -
 வாலுடனே; ஆகாயம்உற்ற கதலிக்கு - ஆகாயத்திற்
பறக்கின்ற காற்றாடிக்கு; உவமையானான் - ஒப்புமையானான்.

    சிரஞ்சீவியர்கள் எழுவராவர். அசுவத்தாமன், மாபலி, வியாசன், அனுமன்,
விபீடணன், மார்க்கண்ட முனி, பரசுராமன் (பொருட்டொகை நி - 599)
என்பவர். அவருள் அனுமன் சிறந்தவன் என்று கவிச்சக்கரவர்த்தி திருவுளம்
பற்றுகிறார். ஆதலின் சாகாவரத் தலைவரில் திலகம் அன்னான் என்றால். கதலி
- கற்றாடி.                                              (84)