இராமநாமம்இடையூறு நீக்கும்

4827.

'சொற்றார்கள் சொற்ற தொகையல்ல துணை ஒன்றோ
முற்றா முடிந்தநெடுவானினிடை முந்நீ
ரில்தாவி எற்றுஎனினும் யான்இனி இலங்கை
உற்றால்,விலங்கும் இடையூறு' என, உணர்ந்தான்.

     சொற்றார்கள் -வழியைக்கூறியவர்கள்; சொற்ற - கூறிய துன்பங்கள்;
தொகை அல்ல - எண்ணுக்கு உட்பட்டவை அல்ல; துணை ஒன்றோ -
அத்துன்பங்களை நீக்கும் துணை ஒன்றா (பல); நெடுவானின் இடை - பெரிய
ஆகாயத்தில் (அவைகள்); முற்றாமுடிந்த - அடியோடும் ஒழிந்துபோயின;
முந்நீரில் தாவி - கடலில் தாவிப்போய்; எற்று எனினும் - எத்தகைய
இடையூறு வந்தாலும்; யான்இனி - நான் இப்போது; இலங்கை உற்றால் -
இலங்கையை அடைந்தால்; இடையூறு விலங்கும் - இடையூறு விலகிப்
போகும்; என உணர்ந்தான் - (என்று அனுமான்) அறிந்தான்.

     வழி கூறியவானரர்கள் குறித்த துன்பங்கள் மிகப்பல. அவற்றை நீக்கும்
துணைகளும் பல. அத்துன்பங்கள் யாவும் ஒழிந்தன. யான் இலங்கை
அடைந்தால் துன்பம் முற்றும் நீங்கும் என்று அனுமன் கருதினான்.  (87)