| 4836. | நாகாலயங்களொடு நாகர் உலகும், தம் பாகு ஆர்மருங்குதுயில்வென்ன உயர்பண்ப; ஆகாயம்அஞ்சஅகல் மேருவை அனுக்கும் மாகால் வழங்குசிறு தென்றல்என நின்ற. | நாகாலயங்களொடு- நாகங்கள் வாழும் பாதாள உலகமும்; நாகர் உலகும் - தேவர்கள் வாழும் விண்ணுலகமும்; தம் - தம்முடைய; பாகு ஆர்மருங்கு - அழகு நிரம்பிய பக்கத்தில்; துயில்வென்ன - தங்குவன என்றுகூறும்படி; உயர்பண்ப - உயரிய இயல்பைப் பெற்ற மாடங்கள்; ஆகாயம்அஞ்ச - விண்ணுலகம் அஞ்சும்படியாக; அகல் மேருவை அனுக்கும் -பரந்த மேருமலையை வருத்துகின்ற; மாகால் - பெரிய சண்ட மாருதமும்;வழங்கு சிறு தென்றல் - (மெல்ல) இயங்குகின்ற தென்றல் காற்று; என நின்ற- என்று கூறும்படி தலைநிமிர்ந்து நிற்பன. மாடங்களின்கீழ்ப் பகுதியில் பாதாளவுலகமும், மேற்பகுதியில் விண்ணுலகமும் தங்கியுள்ளன என்று கூறும்படி நிலவறைகளையும் மேல் உப்பரிகைகளையும் பெற்றுள்ளது என்பது கருத்து. மாகால் தென்றல்என நின்ற என்றதனால் மாடங்களின் உறுதி தெரிகிறது. பண்ப - பண்பை உடைய மாளிகைகள் - எழுவாய். நின்ற - பலவின்பால் வினைமுற்று. பயனிலை. பண்பநின்ற என்று கூட்டிப் பார்க்கவும். (2) |