4839. | நானநாள்மலர்க் கற்பக நறுவிரை நான்ற பானம் வாய்உறவெறுத்த, தான்ஆறுடைப் பறவை தேன்அவாம்விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய வானயாறுதம்அரமியத் தலம்தொறும் மடுப்ப. |
நாள் - அன்று பூத்த; நான மலர்க் கற்பகம் - மணத்துடன் கூடிய மலர்களைப் பெற்ற கற்பக மரங்களின்; நறுவிரை நான்ற பானம் - நல்ல மணத்துடன் பெருகிய தேன்; வாய் உற வெறுத்த - தம்முடைய வாயில் பெருக (உண்டு) தெவிட்டிய; ஆறு தாள் உடைப் பறவை - ஆறு கால்களைப் பெற்ற வண்டுகள்; தேன் அவாம் - வேறு தேனை உண்ண விரும்பி; விரை செழுங்கழுநீர் - மணத்துடன் கூடிய செங்கழுநீர்ப் பூவில்; துயில் செய்ய - தங்குதலை மேற்கொள்ளும்படி; வான யாறு - ஆகாய கங்கையானது; தம் அரமியத் தலந்தொறும் - அவரது நிலா முற்றங்கள்தோறும்; மடுப்ப - பாயப் பெற்றன. பானம் வாயுறஎன்பதற்கு உண்ட தேன் வாய்வழியே வெளிப்பட என்றும் கூறலாம். (5) |