4840. | குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய மழலை மென்மொழிகிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் சுழலும் நல்நெடுந்தடமணிச் சுவர்தொறும் துவன்றும் நிழலும்தம்மையும் வேற்றுமை தெரிவு அரு நிலைய |
(இலங்கை மாடங்கள்) குழலும் வீணையும்யாழும் என்று இனையன குழைய - குழல் வீணை யாழ் என்று கூறப்படுகின்ற இப்படிப்பட்ட இசைக் கருவிகள் மனம் நெகிழ; மென் மழலை மொழி - மென்மையான மழலைச் சொற்களை; இருந்து - வீற்றிருந்து; கிளிக்கு அளிக்கின்ற மகளிர் - கிளிகட்குச் சொல்லிக் கொடுக்கும் பெண்கள்; சுழலும் - சுற்றிலும் உள்ள; நெடும் நல் - பெரிய நல்ல; தடமணி சுவர்தொறும் - பெரிய மணிகள் பதிக்கப்பெற்ற சுவர்தோறும்; துவன்றும் நிழலும் - செறிந்துள்ள நிழலையும்; தம்மையும் - தங்களையும்; வேற்றுமை தெரிவு அரு நிலைய - வேறுபாடு உணரமுடியாத நிலைமை உடையன. பெண்கள்தம்மையும் தம்முடைய நிழலையும் பிரித்து அறிய முடியாதபடி உள்ளன. மாடங்கள் மகளிர் தெரிவரும் நிலையில் உள்ளன. சுழலும் - சுற்றிலும் உள்ள. (6) |