4843. | மரம்அடங்கலும் கற்பகம்; மனைஎலாம் கனகம்; அரம டந்தையர்சிலதியர் அரக்கியர்க்கு; அமரர் உரம்மடங்கிவந்து உழையராய் உழல்குவர்; ஒருவர் தரம் அடங்குவதுஅன்றுஇது; தவம்செய்த தவமால். |
மரம்அடங்கலும் -(இலங்கையில்) எல்லா மரங்களும்; கற்பகம் - கற்பக மரங்கள்; மனை எலாம் - எல்லா வீடுகளும்; கனகம் - பொன்னால் கட்டப்பட்டவை; அரக்கியர்க்கு - அரக்கப் பெண்களுக்கு; சிலதியர் அரமடந்தையர் - தொண்டு புரிபவர் தேவமகளிர்; (அரக்கர்களுக்கு) அமரர்- தேவர்கள்; உரம்மடங்கி வந்து - வலிமை ஒடுங்கி (அரக்கர் வீட்டுக்கு)வந்து; உழையராய் உழல்குவர் - பணியாளராய் வருந்துபவர்கள்; இது -இந்தச்சிறப்புகள்; ஒருவர் தரம் அடங்குவது அன்று - ஒருவனுடைய தகுதியால் வந்து சேர்வது அன்று; தவம் செய்த - தவங்கள் எல்லாம் கூடிச் செய்த; தவமால் - தவத்தின் பயனாகும். தரம் - தகுதி.ஒருவர் தகுதியால் பெற்ற சிறப்புகள் அளவுபட்டிருக்கும். இது அளவு கடந்திருத்தலின் தவத்தின் பயன் என்று கூறப்பெற்றது. தவம் செய்ததவம் - நல்வினைகளால் உண்டானதவம். தவமும் தவம் உடையார்க்கு ஆகும். என்னும் குறளுக்கு மணக்குடவர் தவம் செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும் என்று கூறினார். பெரும்பான்மையானபாடம் 'தவம் செயத் தகுமால்' என்பது. அப்பாடம் அரக்கர் தவத்தால் சிறப்புப்பெற்றனர். ஆகையால்"தவமே செய்யத் தரும்' என்று பொருள் தரும். (9) |