| 4844. | தேவர்என்பவர் யாரும் இத்திரு நகர்க்கு இறைவற்கு ஏவல் செய்பவர்,செய்கிலாதவர் எவர் என்னின், மூவர் தம்முளும்ஒருவன் அங்கு உழையனா முயலும் ! தாவில் மாதவம்அல்லது பிறிதொன்று தகுமோ ? |
திருநகர்க்குஇறைவற்கு - இந்த இலங்கைஅரசனுக்கு; தேவர் என்பவர் யாரும் - தேவர் என்று சொல்லப்படுபவர் அனைவரும்; ஏவல் செய்பவர் - அடிமைப் பணி புரிவோர்; (ஏவல்) செய்கிலாதவர் எவர் என்னின் - (அவனுக்கு) பணிபுரியாதவர் எவர் என்றால்; மூவர் தம்முளும் - மும்மூர்த்திகளில்; ஒருவன் - ஒருவனாகிய பிரமதேவன்; அங்கு - அந்த இலங்கையில்; உழையனா முயலும் - பணிசெய்பவனாக முயல்கின்றான்; தா இல் மாதவம் அல்லது - குற்றமற்ற பெருந்தவம் அல்லது; பிறிது ஒன்று தகுமோ - வேறு ஒன்று செய்தற்குத் தகுதியுடையது ஆகுமோ. உழையன் -அருகிருப்போன்; ஏவல்கூவல் செய்பவன். தேவரும் பிரமதேவனும் ஏவலர் ஆனது மாட்சியால் என்பதால் தவத்தால் எதையும் பெறலாம் என்பது விளங்கும். தவமே செய்யத்தக்கது என்பதாம். (10) |