4845. | 'போர் இயன்றன தோற்ற' என்று இகழ்தலின் புறம்போய் நேர் இயன்ற வன்திசைதொறும் நின்றமா நிற்க ஆரியன்தனிஐங்கரக் களிறும், ஓர் ஆழிச் சூரியன் தனித்தேருமே இந்நகர் தொகாத. |
போர் இயன்றன -போரைச்செய்ய உடன்பட்டு; தோற்ற என்று - தோற்றுப் போயின என்று; இகழ்தலின் - (இராவணன்) அலட்சியம் செய்தமையால்; புறம்போய் - வெளியே சென்று; நேர் இயன்ற - எதிரெதிராக உள்ள; வன்திசை தொறும் - வலிமைமிக்க திசைகள் தோறும்; நின்றமா - நிற்கின்ற யானைகள்; நிற்க - ஒதுங்கி நிற்க; இ நகர் தொகாத - இந்நகரைச் சாராதவைகள் (யானைகளில்); ஆரியன் - (யானைகளில்) சிவபிரான் பெற்றெடுத்த; தனி ஐங்கரக் களிறும் - ஒப்பற்ற ஐந்து கரங்களைப்பெற்ற விநாயகராகிய யானையும்; சூரியன் - தேர்களில் சூரியனின்; ஓர்ஆழித் தனித்தேருமே - ஒரு சக்கரத்தையுடைய ஒப்பற்ற தேருமே யாகும். ஐங்கரக் களிறு -விநாயகப் பிரான், ஆரியன் என்றது தட்சிண மூர்த்தியான சிவபிரானை. பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் என்பார் மணிவாசகர். ஆரியன் சாஸ்தா என்றும் கூறலாம். சாஸ்தாவின் வாகனம் யானை. (11) |