| 4847.. | தழங்குபேரியின் அரவமும், தகைநெடுங் களிறு முழங்கும் ஓதையும்மூரிநீர் முழக்கொடு முழங்கும்; கொழுங் குழல்புதுக் குதலையர் நூபுரக்குரலின் வழங்குபேர் அருஞ்சதிகளும் வயின்தொறும் மறையும். |
தழங்கு - ஒலிக்கும்; பேரியின் அரவமும் - முரசின் ஒலியும்; தகை நெடுங்களிறு - தகுதிமிக்க யானைகள்; முழங்கும் ஓதையும் - முழங்குகின்றமுழக்கமும்; மூரிநீர் முழக்கொடு - கடலின் முழக்கத்துக்குச் சமமாக; முழங்கும் - ஒலிக்கும்; கொழும் குழல் - வளமான புல்லாங்குழல்போல; புதுக்குதலையர் - புதுமையாக மழலைமொழி பேசும் மகளிர் அணிந்த; நூபுரக் குரலின் - சிலம்பின் ஓசையினாலே; பேர் வழங்கும் - பெருமை தருகின்ற; அரும் சதிகளும் - அருமையான தாள ஒத்துக்கள்கூட; வயின்தொறும் - இடங்கள் தோறும்; மறையும் - ஒடுங்கிப் போகும். (13) |