4848. | மரகதத்தினும் மற்றுஉள மணியினும் வனைந்த குரக தத்தடந்தேரினம் அவைபயில் கொட்டில் இரவி வெள்கநின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் நகரம் ஒக்குமால்நல்நெடுந் துறக்கம், இந்நகர்க்கு. |
மரகதத்தினும் -மரகதக்கற்களாலும்; மற்றுள - வேறுவகையாக உள்ள; மணியினும் - மாணிக்கங்களாலும்; வனைந்த - அமைக்கப்பட்ட; குரகதத் தடந்தேர் இனம் - குதிரைகளால் இயங்கும் தேர்க்கூட்டமாகிய; அவைபயில் - அவைகள் தங்கியிருக்கும் தேர்ச்சாலைகள்; இரவி - சூரியனும்; வெள்க நின்று - நாணம் அடையும்படி இருந்து; இமைக்கின்ற இயற்கைய - ஒளிவீசும் தன்மையுடையன; என்றால் - என்று கூறப்பெறுமானால்; இந்நகர்க்கு - இந்த இலங்கைக்கு (ஒப்புக்கூறின்); நல்நெடும் துறக்கம் - நல்லபெரிய சுவர்க்கம்; நரகம் ஒக்கும் - நரகமே போன்றிருக்கும். இமைத்தல் - ஒளி வீசுதல் (14) |