4849. | திருகுவெஞ்சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்; அருகு போகின்ற திங்களும் மறுஅற்றது;-அழகைப் பருகும் இந்நகர்த் துன்ஒளி பாய்தலின்;- பசும்பொன் உருகுகின்றதுபோன்று உளது; உலகுசூழ் உவரி. |
அழகைப் பருகும் -உலகஅழகையெல்லாம் தன்பால் அடக்கும்; இந்நகர் - இந்த இலங்கையில்; துன்ஒளி - நிரம்பிய ஒளியானது; பாய்தலின் - (எங்கும்) பரவுதலாலே; திருகும் - மாறுபட்ட; வெஞ்சினத்து அரக்கரும் - கொடுங்கோபத்தை உடைய அரக்கர்களும்;கருநிறம் தீர்ந்தார் - கரிய நிறம் நீங்கப் பெற்றனர்; அருகு - பக்கத்தில்; போகின்ற திங்களும் - செல்கின்ற சந்திரனும்; மறு அற்றது - (தன்பால்பெற்ற) களங்கம் நீங்கியது; உலகு சூழ் உவரி - உலகைச் சுற்றியுள்ள கருங்கடல்; பசும்பொன் - மாற்றுயர்ந்த பொன்னானது; உருகுகின்றது போன்று உளது - உருகி (அலையடிப்பது) போன்றுள்ளது. அருகு பேர்கின்றதிங்கள் என்னும் பாடம் சிறக்கும். பேர்கின்ற என்பது போகின்ற என்றும் படிக்கப்படும். பேர்தல் - நிலை குலைதல். உவரி - கருங்கடல், பசும்பொன் - மாற்று உயர்ந்த பொன் (புறம் 141). (15) |