| 4851. | தேனும்சாந்தமும் மான்மதச் செறிநறுஞ் சேறும் வான நாள்மலர்க்கற்பக மலர்களும் வயமாத் தான வாரியும்நீரொடு மடுத்தலின், தழீஇய மீனும் தானும்ஓர் வெறிமணம் கமழும் அவ்வேலை. |
தேனும்சாந்தமும் - தேனையும் சந்தனத்தையும்; செறிநறும் - நறுமணம் செறிந்துள்ள; மான்மதச் சேறும் - கஸ்தூரிக் குழம்பையும்; வான நாள் - வானிலுள்ள நட்சத்திரங்களைப்போல; மலர் - மலர்ந்த; கற்பகமலர்களும் - கற்பகப் பூக்களையும்; வயமா - வெற்றி பெற்ற யானைகளின்; தானவாரியும் - மதவெள்ளத்தையும்; நீரொடு மடுத்தலின் - நதியின் நீருடன் உட்கொண்ட காரணத்தால்; அவ்வேலை - அக் கடலானது; தழீஇய மீனும் - தன்னைச் சார்ந்து வாழ்கின்ற மீன்களும்; தானும் - (கடலாகிய) தானும்; ஓர் வெறிமணம் கமழும் - ஒப்பற்ற தெய்வமணம் பெறும். கடலானது, தேன்முதலாகிய பொருள்களை நதியில் நீருடன் மடுப்பதால் மீனும் தானும் தெய்வமணம் பெற்றது. வெறி - தெய்வத்தன்மை - வெறியுறு சிறப்பு (தொல் - பொருள்) நீர் என்றது நதியை. நீர்ப்பிணக்கு, நிலப்பிணக்கு என்னும் தொடர் காண்க - (தனிச்சுலோகி - கிட்கிந்தா) நாள் - நட்சத்திரம். மலர் என்பது கற்பகத்தைச் சாராது மலரைச் சார்ந்தது, தழாத்தொடர். (17) |