4852.

தெய்வத்தச்சனைப் புகழ்துமோ ? செங்கண்வாள்
                                    அரக்கன்
மெய்ஒத்துஆற்றிய தவத்தையே வியத்துமோ ?
                                    விரிஞ்சன்
ஐயப்பாடு இலாவரத்தையே மதித்துமோ ? அறியாத்
தொய்யல்சிந்தையேம், யாவரை யாதென்று துதிப்போம்.

    தெய்வத்தச்சனைப புகழ்துமோ ? - (இ்ந் நகரை அமைத்த)
தேவசிற்பியைப் புகழ்வோமா..?; செங்கண்வாள் அரக்கன் - சிவந்த
கண்களையும் வாளையும் பெற்ற இராவணன்; மெய் ஒத்து - சத்தியத்துடன்
ஒன்றுபட்டு; ஆற்றிய - செய்த; தவத்தையே - தவம் ஒன்றையே;
வியத்துமோ -
மதிப்போமா?  விரிஞ்சன் - பிரம்மதேவன் (வழங்கியது);
ஐயப்பாடு இலா - சந்தேகத்துக்கு இடம் இல்லாத; வரத்தையே - வரத்தை
மட்டும்; மதித்துமோ - மதிப்போமா? அறியா - (ஒன்றைத் தேர்ந்து
புகழ்வதை) அறியாத; தொய்யல் சிந்தையேம் - தளர்ந்த மனத்தைப்
பெற்றயாம்; யாவரை - தச்சன், பிரம்மன் - இராவணன் என்னும் இவருள்
எவரை; யாதென்று - எவ்வாறு; துதிப்போம் - புகழ்வோம்.

     'யாவரை யாதுஎன்று துதிப்போம்' என்னும் பாடம் நிரம்பவுள்ளது.
எவ்வகை துதிப்போம் என்னும் பாடம் சிறந்தது என்பது என் கருத்து. யாவரை
- யாது என்று அமைத்தால் திணை வழுவுள்ளது.                  (18)