தவத்தை வியந்தது

4854.

நீரும் வையமும் நெருப்பும் மேல்நிமிர் நெடுங்காலும்
வாரி வானமும்வழங்கல ஆகும். தம் வளர்ச்சி
ஊரின் இந்நெடுங்கோபுரத்து உயர்ச்சிகண்டு
                               உணர்ந்தால்
மேரு எங்ஙனம்விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி ?

     ஊரின் - இந்த இலங்கைமாநகரின்;  இ - இந்த; நெடுங்கோபுரத்து -நீண்ட கோபுரத்தினுடைய; உயர்ச்சி கண்டு உணர்ந்தால் - வளர்ச்சியைப்
பார்த்து அறிந்தால்; (அறிஞர்களால்) நீரும் வையமும் நெருப்பும் -
தண்ணீரும் மண்ணும் தீயும்; மேல்நிமிர்  - மேல்நோக்கி வீசும்;
நெடுங்காலும் - பெருங்காற்றும் என்று கூறப்பெற்ற பூதங்களின்;
வாரிவானமும் - பெரும்பரப்பையுடைய ஆகாயமும்; தம் வளர்ச்சி -
சிறப்புக்கள்; வழங்கல ஆகும் - கொண்டாடப்படாமல் போகும்;
(இதையறிந்தால்)
மேரு- மகாமேரு மலையானது; முழுமுற்றும் வெள்கி -
(தன்னுடைய) உடல் முழுவதும் நாணத்தால் சுருங்கி; எங்ஙனம் விளர்க்குமோ
-
எப்படி வெளுத்துப் போகுமோ.

     வையம் -பிருதிவி (மண்) வழங்குதல் - கொண்டாடப்படுதல். 'வழங்கு
தாரவன்' என்னும் தேவரின் தொடருக்கு நச்சர் உலகம் கொண்டாடப்படுதலின்
வழங்குதாரவன் என்றார், என விளக்கினார். (சிந்-2504) அவற்றின் வளர்ச்சி
வழக்கு வீழ்ந்தனவாகும் என்றும் கூறலாம்.                       (20)