| 4856. | தீயசெய்குநர் தேவரால்; அனையவர்சேரும் வாயில் இல்லதுஓர்வரம்பு அமைக்குவென் என மதியா காயம் என்னும் அக் கணக்கறு பதத்தையும் கடக்க ஏயும் நன்மதில்இட்டனன் - கயிலையை எடுத்தான். |
கயிலையைஎடுத்தான் - கயிலையைப் பெயர்த்துஎடுத்த இராவணன்; தேவர் - தேவர்கள்; தீய செய்குநர் - தீமையைச் செய்பவர்கள்; அனையவர் - அந்தத் தேவர்கள்; சேரும் - இலங்கையை அடையும்; வாயில் இல்லது - வழியே இல்லாத; ஓர் வரம்பு அமைக்குவென் - ஒரு தடையை அமைப்பேன்; என - என்று; மதியா - ஆலோசித்து; காயம் என்னும் - ஆகாயம் என்று கூறப்பெற்ற; அக்கணக்கறு பதத்தையும் - அந்த முடிவற்ற மண்டலத்தையும்; கடக்க - தாண்டி அப்பாற் செல்லும்படியாக; ஏயும் - பொருந்திய; நன்மதில் இட்டனன் - நல்ல மதிலை (இலங்கைக்கு) அமைத்தான். வரம்பு - தடை.காதளவு வருவன, கடப்பன ஆகல் ஆகாது என இட்ட வரம்பு (தக்க - பரணி - 132உரை) "ஏயும் நன்மதில்எடுத்தனன் கயிலையன்று எடுத்தான்' என்னும் பாடம் கட்டுரைச் சுவைபடவுள்ளது ஆல் - அசை. ஆகையினாலே என்று பொருள் கூறினும் பிழையில்லை. (22) |