4857. | கறங்குகால்புகா; கதிரவன் ஒளிபுகா; மறலி மறம் புகாது; இனிவானவர் புகார் என்கை வம்பே ! திறம்புகாலத்துள் யாவையும் சிதையினும், சிதையா அறம் புகாது,இந்தஅணி மதிள் கிடக்கை நின்று அகத்தின் !* |
இந்த - ; அணி -அழகிய;மதிள் கிடக்கை நின்று - மதிளின் பரப்பிலிருந்து; அகத்தின் - இலங்கைக்குள்ளே; கறங்கு கால் புகா - சுழன்று வீசும் காற்றுகள் நுழையா; கதிரவன் ஒளி புகா - சூரியனின் வெப்பக்கதிர்கள் நுழையா; மறலி மறம் புகாது - யமனுடைய கொலைத்தொழில் நுழையாது; இனி - இனிமேல்; வானவர் புகார் என்கை - தேவர்கள் (போர் செய்ய எண்ணி) நுழையார் என்று கூறுதல்; வம்பே - வீண் மொழியாகும்; திறம்பு காலத்துள் - (பொருள்யாவும் மாறுபடும்) ஊழிக்காலத்தில்; யாவையும் சிதையினும் - எல்லாம் அழிந்தாலும்; சிதையா - விகாரம் அடையாத; அறம் - அறக்கடவுள்; புகாது - நுழையாது. மறம் - கொலைத்தொழில். மறம் திருந்தான் என்னும் கலிக்கு (குறிஞ்சி 2) கொலைத் தொழில் குறைவின்றித்திருந்திய கானவர் என்றார் நச்சர். கிடக்கை - பரப்பு. முருக அமர் பூமுரண் கிடக்கை - (பட்டினப் - 37) நச் - உரை புகுதல்என்பது நுழைதல் என்னும் சாதாரணப் பொருள் தராமல் போர் செய்யப்புகுதல் என்னும் பொருள் தந்தது. மேற்செலவு என்பது படை எடுப்பதைக்குறித்தலைப் போல. (23) |