4863.

மகரவீணையின் மந்தர கீதத்து மறைந்த,
சகர வேலையின்ஆர்கலி; திசைமுகம் தடவும்
சிகர மாளிகைத்தலம்தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின்அழுந்தின முகிற்குலம் அனைத்தும்.

     மகர வீணையின் -மகரவடிவாய் அமைந்த வீணையில் தோன்றிய;
மந்தர கீதத்து - மென்மையான கீதத்தினாலே; சகரவேலையின் - சகரரால்
தோண்டப்பெற்ற கடலினுடைய; ஆர்கலி மறைந்த - பேரொலி
மறைந்துவிட்டன; திசை முகம் தடவும் - நான்கு திசைகளையும் தடவுகின்ற;
சிகரம் - விமானங்களைப் பெற்ற; மாளிகைத் தலம் தொறும் - மாளிகையின்இடங்கள் தோறும்; தெரிவையர் தீற்றும் - பெண்கள்
புகைக்கின்ற; அகருதூமத்தின் - அகிலின் புகைப்பரப்பில்; முகில் குலம்
அனைத்தும் -
எல்லாமேகக் கூட்டங்களும்; அழுந்தின - மறைந்து
விட்டன.

     மந்தரகீதத்தில் கடல்ஒலி அடங்கிவிட்டன. அகிற்புகையில் மேகங்கள்
மறைந்தன. மந்தரம் - மெல்லோசையாற் பாடுதல் 'மந்தரம், மத்திமம், தாரம்
இவை மூன்றில் (கல்லாடம் 21-50) மந்தரம் - படுத்தல். இசை கேட்டுக் கடல்
அமைதி பெற்றது. ஏழுகடலும் இடை துளும்பா (பெரிய புரா - ஆனாயர் - 35)
இ்ப்பாடலில் இசையின் அமைதியும் புகையின் மிகுதியும் பேசப்பட்டது.                                            (29)