4864. | பளிக்கு மாளிகைத் தலம்தொறும், இடம்தொறும், பசுந்தேன் துளிக்கும் கற்பகத் தண்நறுஞ் சோலைகள்தோறும், அளிக்கும்தேறலுண்டு ஆடுநர் பாடுநர்ஆகிக் களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக்காணேன். |
பளிக்குமாளிகைத் தலந்தொறும் - பளிங்கால்அமைக்கப்பெற்ற மாளிகைகளின் உப்பரிகை தோறும்; இடந்தொறும் பசுந்தேன் துளிக்கும் - எல்லா இடங்களிலும் தேனைத்துளிக்கின்ற; தண்நறும் - குளிர்ந்த நறுமணம் வீசும்; கற்பகச் சோலைகள் தோறும் - கற்பக மரங்கள் நிரம்பிய சோலைகள் தோறும்; அளிக்கும் - பணியாட்கள் வழங்கும்; தேறல் உண்டு - கள்ளைப் பருகி; ஆடுநர் பாடுநர் ஆகி - (மயக்கத்தால்) ஆடுபவர்களாகவும் பாடுபவர்களாகவும் இயல்பு திரிந்து; களிக்கின்றார் அலால் - செருக்குக் கொள்பவரைத் தவிர; கவல்கின்றார் ஒருவரை - கவலைப்படுகி்ன்ற ஒரு மனிதரை; காணேன் - (யான்) காணவில்லை. கவல்கின்றார்என்பது பிராட்டியைக் குறிப்பதாக வலிந்து பொருள் கூறுவாரும் உளர். இடந்தொறும் ஆடுநர் பாடுநர் என்றும் கூறலாம். ஏற்பின் கொள்க. இ்ங்கு அது கற்பகமரத்துக்கு அடைமொழியாகப் பேசப் பெற்றது. இடந்தொறும் தேன் துளிக்கும் கற்பகம் என்க. (30)
|