4865. | தேறல் மாந்தினர்; தேன்இசை மாந்தினர்; செவ்வாய் ஊறல் மாந்தினர்; இன்னுரை மாந்தினர்; ஊடல் கூறல் மாந்தினர்; அனையவர்த் தொழுது அவர் கோபத்து ஆறல் மாந்தினர் - அரக்கியர்க் குயிர் அன்ன அரக்கர். | அரக்கியர்க்குஉயிர் அன்ன - அரக்கிகளுக்குஉயிர்போன்ற; அரக்கர் - இராக்கதர்கள்; தேறல் மாந்தினர் - (மகளிர் வழங்கிய) மதுவைக் குடித்தார்கள்; தேன் இசை மாந்தினர் - (அவர்கள் பாடும்) தேன் போன்றஇசையைச் சுவைத்தார்கள்; செவ்வாய் ஊறல் மாந்தினர் - அதரபானத்தை உறிஞ்சினார்கள்; இன்னுரை மாந்தினர் - (கலவிப் போரில் அவர்கள் மிழற்றிய) காதல் மொழியை அனுபவித்தனர்; ஊடல் கூறல் மாந்தினர் - (அவர்களின்) ஊடலின் கூறுபாடுகளை எல்லாம் கண்டு அனுபவித்தனர்; அனையவர்த் தொழுது - அம் மகளிரை வணங்கி; அவர் கோபத்து ஆறல் மாந்தினர் - ஊடலின் தணிவினை உட்கொண்டு அமைதி பெற்றனர். மாந்துதல் -பலபொருள் கொண்ட ஒரு சொல். அது உண்ணுதல், குடித்தல் வருந்துதல். அடங்குதல் (சாந்தி பெறுதல்) என்று பலபொருள் தரும். (31) |