4866.

எறித்தகுங்குமத்து இளமுலை
     எழுதியதொய்யில்,
கறுத்த மேனியில்பொலிந்தன;
     ஊடலில்கனன்று,
மறித்தநோக்கியர் மலர்அடி
     மஞ்சுளப்பஞ்சி,
குறித்தகோலங்கள் பொலிந்தில;
     அரக்கர்தம் குஞ்சி.

     இளமுலை - (அரக்கியர்களின்) இளமையான முலையின் கண்ணே;
எறித்த குங்குமத்து -
(சிவந்த) ஒளியை வீசுகின்ற குங்குமக் குழம்பால்;
எழுதிய தொய்யில் -
எழுதப் பெற்ற வரிக் கோலங்கள்; கறுத்த மேனியில்
-
(அரக்கர்களின்) கரிய மேனியில்; பொலிந்தன - விளக்கமாகத் தெரிந்தன;
ஊடலில் -
 ஊடற்பிணக்கத்தாலே; கனன்று - சீற்றங் கொண்டு; மறித்த
நோக்கியர் -
 மாறுபாடு பெற்ற விழிகளைப் பெற்ற அரக்கியர்களின்; மலரடி
-
(தாமரை) மலர்போன்ற பாதத்தில்; மஞ்சுளப் பஞ்சி - செம்பஞ்சுக்
குழம்பாலே; குறித்த கோலங்கள் - எழுதிய கோலங்கள்; அரக்கர் குஞ்சி -
அரக்கர்களின் தலைமயிரின்கண்; பொலிந்தில - விளங்கித் தோன்றவில்லை.

     அரக்கர்களின்கரியநிறமும் அவர்களின் தலைமயிரின் சிவந்த நிறமும்
பேசப்பட்டது. தொய்யில் -மகளிரின் மார்பில் அணியப் பெறும் வரிக்கோலம்.
இது கொடிவடிவாகவும்,   கரும்பு வடிவாகவும் எழுதப்பெறும்.      (32)