4869.

காயத்தால்பெரியர்; வீரம்
     கணக்குஇலர்; உலகம் கல்லும்
ஆயத்தார்;வரத்தின் தன்மை
     அளவற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்;அவர்க்கு எங்கேனும்
     வரம்பும்உண் டாமோ ? மற்று ஓர்
தேயத்தார்தேயம் சேறல்
    தெருவிலோர் தெருவில் சேறல்.

     காயத்தால்பெரியர் - உடம்பால்மிகப்பெரியவர்கள்; வீரம் கணக்கு
இலர் -
வீரத்தாலும் அளவற்றவர்கள்; உலகம் கல்லும் - உலகத்தைத்
தோண்டி மேலே எடுக்கும்; ஆயத்தார் - சேனைக் கூட்டத்தை
யுடையவர்கள்; வரத்தின் தன்மை - பெற்ற வரத்தினுடைய இயல்பால்; அளவு
அற்றார் -
பிறரால் அளக்கமுடியாதவர்கள்; அறிதல் தேற்றா - பிறரால்
அறிய முடியாதவர்கள்; மாயத்தார் - மாயைகளை உடையவர்கள்; அவர்க்கு
-
அவ்அரக்கர்களுக்கு; எங்கேனும் - எந்த இடத்திலாவது; வரம்பும்
உண்டாமோ -
எல்லையும் உள்ளதாகுமோ? தெருவிலோர் - ஒரு தெருவில்
இருப்பவர்; தெருவில் சேறல் - மற்றொரு தெருவுக்குப் போவது; மற்று ஓர்
தேயத்தார் -
பிற தேயத்தார்; தேயம் சேறல் - வேறு தேயத்தை அடைவது
போலும்.

     பேருடலும்பேராற்றலும் கொண்ட அரக்கர்கள் தங்கியுள்ள இலங்கைக்கு
எல்லையில்லை. அவ்விலங்கையில், ஒரு தெருவினர் மற்றொரு தெருவுக்குப்
போதல். ஒரு தேயத்தார், வேறு தேயத்துக்குப் போதல் போலாகும். ஒரு
தேயத்தில் உள்ளவர்கள் மற்றொரு தேசத்துக்குப் போவது என்பது
அரக்கர்களுக்கு ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவுக்குப்போவது போல
எனவும் பொருள் கூறலாம்.

     அவர்க்குஎங்கேனும் வரம்பும் உண்டாமோ, மற்றோர் தேயத்தார் தேயம்
சேறல் தெறுவிலார் செருவில் சேறல் என்னும் பாடத்தை மேற்கொண்டு
(அண்ணாமலை பதிப்பு 109) -  அவ்வரக்கர்களின் தொகைக்கு எல்லை
என்பது  எங்காவது உண்டாகுமோ? போர் முகத்துக்குப் போகாவிடில் என்று
நல்உரை வழங்குவோரும் உளர் - ஏற்பன கோடல் இயல்பு.          (35)