4870. | கழல்உலாம்காலும், கால வேல்உலாம் கையும், காந்தும் அழல் உலாம்கண்ணும், இல்லாஆடவர் இல்லை; அன்னார் குழல் உலாம்களிவண் டார்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா மழலையாழ்க்குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ. |
கழல் உலாம்காலும் -வீரக்கழல்கள் அணிந்த கால்களும்; காலவேல் உலாம் கையும் - யமனைப் போன்ற வேலேந்திய கைகளும்; காந்தும் - எரிகின்ற; அழல் உலாம் கண்ணும் - நெருப்பைப் போல் அழல்கின்ற கண்களும்; இல்லா - பெற்றிராத; ஆடவர் இல்லை - ஆண் மக்கள் இல்லை;அன்னார் - அந்த மகளிரின்; குழல் உலாம் - கூந்தலில் சூழ்ந்துள்ள;களிவண்டு - வண்டுகள்; ஆர்க்கும் - ஆரவாரிக்கின்ற; குஞ்சியால் -(ஆடவர்களின்) தலைமயிரினாலே; பஞ்சி குன்றா - (பாதத்தில்) செம்பஞ்சிக்குழம்பு சிதையாத; மழலையாழ் - இனிய ஓசையுடைய யாழைப் போல;குதலைச்செவ்வாய் - இளஞ்சொற்களைப் பேசுகின்ற வாயையுடைய;மாதரும்இல்லை - பெண்களும் இல்லை. மகளிரின்கூந்தலின் வண்டு மொய்க்கும் குஞ்சி என்பது வேட்கைக் குறிப்பு.கொம்பர் மடப்பெடை வண்டும் கருங்குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணரக் கண்டார்' என்னும் வரைக் காட்சிப் படலப் பாடல் காண்க (கம்ப.859) காதல் பரிமாற்றத்தை வண்டைக் கொண்டுகாட்டுவது கவிச்சக்கரவர்த்தியின் இயல்பு. (கம்ப.910) மாது, ஓ - அசைகள். (36) |