4871. | கள்ளுறக்கனிந்த பங்கி அரக்கரைக்கடுத்த - காதல் புள்உறத்தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ, வெள்உறுப்புஎயிற்ற, செய்ய தலையன,கரியமெய்ய, உள்உறக் களித்தகுன்றின் உயர்ச்சிய- ஓடை யானை. |
காதல் - அன்பினாலே;புள்உறத்தொடரும் - வண்டுகள் பின்பற்றிச் செல்லும்; மேனி - உடம்பிலே; புலால்உற - புலால் நாற்றம் நிரம்பும்படி; கடிது போவ - வேகமாகச் செல்பவையும்; வெள் உறுப்பு எயிற்ற - வெண்மையான நீண்ட தந்தங்களை உடையவையும்; செய்ய தலையன - சிவந்த தலையைப் பெற்றனவும்; கரிய மெய்ய - கருத்த உடம்பை உடையவையும்; உள்உறக்களித்த - ஊக்கமிகுதியால் செருக்குப் பெற்றவையும்; குன்றின் உயர்ச்சிய - மலைபோன்ற தோற்றம் உடையனவும்; (ஆன) ஓடையானை - முகபடாம் அணிந்த யானையானது; கள்உற - தேனைப்போல்; கனிந்த - சிவந்த; பங்கி - தலைமயிரை உடைய; அரக்கரைக் கடுத்த - அரக்கர்களை ஒத்திருந்தன. அரக்கர்கள்வெண்மையான பற்களையுடையவர்கள். யானை வெண்மையான தந்தங்களைப் பெற்றிருக்கும். அரக்கர்களும் செந்தலையும் கரிய மெய்யும் உடையவர். யானையும் சிவந்த தலையும் கரிய மெய்யும் உடைய. அரக்கர் எப்போதும் ஊக்கம் உடையவர்கள். யானையும் ஊக்கம் பெற்றிருப்பன. அரக்கர்கள் மலை போன்ற எடுப்பான தோற்றத்தர். யானையும் மலைபோன்ற உயர்வை உடையன. ஆதலால் யானை அரக்கரைப் போன்றிருந்தன. பொருள் உவமையாயிற்று; உவமை பொருளாயிற்று. (தொல் உவம - 9). உள் - ஊக்கம். உப்பு இலி வெந்தை தின்று உள் அற்று வாழ்பவே (நாலடி) (37) |