இலங்கையில் இருள்பரவுதல் கலிவிருத்தம் 4877. | ஏய்வினைஇறுதியில் செல்வம் எய்தினான் ஆய்வினை மனத்துஇலான், அறிஞர் சொற்கொளான் வீவினைநினைக்கிலான், ஒருவன் மெய்இலான் தீவினை என இருள்செறிந்தது எங்குமே. |
ஏய் வினை -தகுதியுடையதவமுயற்சியால்; இறுதியில் - அழிவற்ற; செல்வம் எய்தினான் - செல்வத்தை அடைந்தவனும்; மனத்து - உள்ளத்தில்;ஆய்வினை இலான் - ஆராய்வதைப் பெற்றிராதவனும்; அறிஞர் - அறிஞர்களின்; சொல் கொளான் - அறிவுரையை மதியாதவனும்; வீவினை நினைக்கிலான் - தனக்கு வரும் மரணத்தை நினையாதவனும்; மெய்இலான் - சத்தியப் பற்றில்லாதவனும் (ஆகிய); ஒருவன் - ஒரு மனிதனுடைய; தீவினை என - தீச்செயல்கள் போல; எங்கும் - எல்லா இடத்திலும்; இருள் செறிந்தது - இருளானது அடர்ந்து பரவிற்று. முயற்சியால்செல்வம் பெற்று முறை பிறழ்ந்தவனின் தீச்செயல் போல் இருள் செறிந்தது. ஏய்வினை - முயற்சி. வினைக்கண் வினையுடையான் (குறள் 519) இங்குள்ள வினைக்கு நல்வினை என்றும் தீவினை என்றும் கூறப் பெற்றமை நன்றெனில் கொள்க. தவ முயற்சியால் பொருள் பெற்றவன் இராவணன் ஆதலின் வேறு கூறற்க. இராவணன் குறிப்பாற் பேசப்படுகிறான். விளம் - விளம்- மா - கூவிளம் என்னும் சீர்களை இவ் விருத்தம் பெற்றுவரும். அமரர் கம்பன் அடிப்பொடி அவர்கள் இராமாவதாரத்தில் 2173 பாடல்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். (மணிமலர் 76) (43) |