4883.

பொன்னகர்மடந்தையர், விஞ்சைப் பூவையர்
பன்னகவனிதையர், இயக்கர் பாவையர்,
முன்னின பணிமுறைமாறி முந்துவார்,
மின்இனம்மிடைந்தென விசும்பின் மீச்செல்வார்.

     பொன் நகர்மடந்தையர் - தேவலோக மகளிர்களும்;விஞ்சைப்
பூவையர் -
வித்தியாதரப் பெண்களும்; பன்னக வனிதையர் - நாக
கன்னியர்களும்; இயக்கர் பாவையர் - யட்ச மங்கையர்களும்; முன்னின
பணி -
(தாங்கள்) ஏற்றுக்கொண்டு செய்து முடித்த வேலையானது; முறைமாறி
-
கிரமப்படி மாறுகின்ற காரணத்தால்; முந்துவார் - விரைபவராய்; விசும்பின்
-
ஆகாயத்திலே; மின்இனம்மிடைந்தென - மின்னல்கூட்டம் நெருங்குவது
போல்; மீச்செல்வார் - மேலே போவார்கள்.

     பணி செய்துமுற்றிய மகளிர்கள் தம் பணியைப் பிறர்பால்
ஒப்படைத்துவிட்டு விண்ணில் செல்வது மின்னற்கூட்டம் நெருங்குவது போல்
உள்ளது. முந்துவார் - முந்தி, முற்றெச்சமாகக் கொள்ளப்பட்டது. முறை
மாறுதல் - தம்பணியைப் பிறர்பால் ஒப்படைத்தல். சிலம்பில் மாதரி, 'நெய்
முறை நமக்கு இன்று' என்று கூறியதைக் கருதுக. இவர்கள் பகற்பணியாளர்கள்.
பகற்பணிக்கு மகளிரும் இரவுப் பணிக்கு ஆடவரும் அமைந்தனர்
போலும்.                                                   (49)