4885.

சித்திரப்பத்தியின் தேவர் சென்றனர்
இத்துணைதாழ்த்தனம்; முனியும் என்றுதம்
முத்தின்ஆரங்களும் முடியும் மாலையும்
உத்தரீ யங்களும்சரிய ஓடுவார்,

    சித்திரப்பத்தியின் - ஓவியங்களின்வரிசைபோல; சென்றனர் தேவர் -சென்று கொண்டுள்ள தேவர்கள்; இத்துணை தாழ்த்தனம் - இவ்வளவு
நேரம்தாமதித்து விட்டோம்; முனியும் என்று - (இராவணன்) கோபிப்பான்
என்றுகருதி (அச்சமுற்று); தம் - தம்முடைய;  முத்தின் ஆரங்களும் -
முத்துக்கள் கோக்கப் பெற்ற ஆரங்களும்; முடியும் மாலையும் - கீரிடங்களும்
பூமாலைகளும்; உத்தரீயங்களும் - மேலாடைகளும்; சரிய - நழுவி
விழும்படி; ஓடுவார் - ஓடுவார்கள்.

     இராவணன்தேவர்கள்பால் பகையுடையான் ஆதலின் அவர்கள்
பணிவில் காலதாமதம் நேர்ந்தால் சினப்பான். அவுணர் முதலானவர்கள்
அரக்கர்களின் செல்லப் பிள்ளைகள் போலும்.

     இராவணன்கொடுங்கோன்மை கூறப்பட்டது.                   (51)