4891.

எண்ணுடைஅனுமன்மேல் இழிந்த பூமழை
மண்ணிடைவீழ்கில; மறித்தும் போகில;
அண்ணல் வாள்அரக்கனை அஞ்சி ஆய்கதிர்
விண்ணிடைத்தொத்தின போன்ற, மீன்எலாம்.

     மீன் எலாம் -நட்சத்திரங்கள் யாவும்; எண்ணுடை - யாவராலும்
மதிக்கப் பெறும்; அனுமன்மேல் - அனுமனின் திருமேனிமேல்; இழிந்த பூ
மழை -
(தேவர்களால்) (தூவப்பெற்று) இறங்கிய பூமாரி; அண்ணல் -
பெருமைமிக்க; வாள் அரக்கனை அஞ்சி - கொடிய இராவணனுக்குப் பயந்து;
மண்ணிடை வீழ்கில - பூமியில்விழாதனவாயும்; மறித்தும் போகில -
திரும்பி மேலேசெல்லாதனவாயும்; ஆய்கதிர் - அசைகின்ற ஒளியைப்
பெற்றுள்ள;விண்ணிடை - ஆகாயத்தில்; தொத்தின போன்ற - தொத்திக்
கொண்டிருப்பன போன்றுள்ளன.

     ஆய்கதிர் -அசைகின்ற கதிர். திருக்கோவை (125) வாள் அரக்கன் -
வாளை ஏந்திய அரக்கன் என்றும் கூறலாம். மீன்களை அமரர் தூவிய
மலராகப் பேசும் பெரிய திருவந்தாதி (61). சேவடி மேல் மண்ணளந்த
அந்நாள்--வானாடர்--பூத்தெளித்தால்--விசும்பின்--மீன், என்று பேசும்.  (57)