4892.

எல்லியின்நிமிர்இருட் குறையும், அவ்இருள்
கல்லியநிலவின்வெண் முறியும், கவ்வின;
புல்லிய பகைஎனப்பொருவ போன்றன-

மல்லிகைமலர்தொறும் வதிந்த வண்டுஎலாம்.

     மல்லிகை மலர்தொறும் - மல்லிகைப் பூக்கள்தோறும்; வதிந்த -
மொய்த்திருக்கின்ற; வண்டு எலாம் - வண்டுகள் யாவும்; எல்லியின் -
இரவுக் காலத்திலே; நிமிர் - செருக்குக் கொள்ளும்; இருள் குறையும் -
இருளின் துண்டங்களும்; அங் இருள் - அந்த இருளை; கல்லிய - பெயர்த்
தெடுத்த; நிலவின் வெண்முறியும் - சந்திரனின் வெள்ளிய துண்டங்களும்;
கவ்வின - (தமக்குள்) கடித்துப் பிடுங்கி (எதிரியை); புல்லிய பகையென -
அற்பப்பகை என்று கருதி; பொருவ போன்றன - போராடுவது
போன்றிருந்தன.

     மல்லிகைப்பூவில் வண்டுகள் மொய்ப்பது, இருளின் துண்டமும் நிலவின்
துண்டமும், தம்முள் கடித்துப் பிடிங்கிப் போராடுவது போன்றிருந்தது.
சந்திரனால் ஒழிந்த இருள் துண்டம் துண்டமாகி, அந்தச்
 சந்திரன்
எடுத்தசிற்றுருவில் போர் பண்ணுகிறது போல. மல்லிகை, சந்திரன்
எடுத்த சிற்றுரு. (பழைய உரை). கவ்வுதல் - கடித்துப் பிடுங்குதல். (நாலடி 70.)
                                                      (58)