4901. | 'ஏழ்உலகின் வாழும்உயிர் யாவையும் எதிர்ந்தால் ஊழின்முறைஇன்றி, உடனேபுகும்; இது ஒன்றோ ? வாழியர்இயங்குவழி ஈதுஎன வகுத்தால் ஆழிஉள ஏழின்அளவுஅன்றுபகை' என்றான். |
ஏழ் உலகில் -ஏழுஉலகத்திலும்; வாழும் - வாழ்கின்ற; உயிர்யாவையும் - எல்லா உயிர்களும்; எதிர்ந்தால் - ஒன்று கூடினாலும்; ஊழின் முறை இன்றி - ஒருவர்பின் ஒருவர் புகும் முறையில்லாமல்; உடனே புகும் - ஒருசேர உள்ளே நுழையும்; இது ஒன்றோ - இப்படிப்பட்ட வாயில் இஃது ஒன்று தானா (பல); வாழியர் - இலங்கையில் உள்ளவர்கள்; இயங்குவழி - நடமாடுவதற்கு அமைக்கப்பெற்ற வழி; ஈது என - இப்படிப்பட்ட தென்று கருதும்படி; வகுத்தால் - அமைக்கப் பெற்றிருந்ததென்றால்; பகை - (இலங்கைக்குள் உள்ள) நம்முடையபகை; உள - நீர் நிரம்பிய; ஆழி ஏழின் அளவு அன்று - ஏழு கடல்களின் அளவன்று (அவற்றினும்பெரிது); என்றான் - என்று சிந்தித்தான். இவ்வாயிலில்உலக உயிர்கள் ஒன்று கூடினாலும் ஒருசேர உள்ளே நுழையலாம். இப்படிப்பட்ட வாயில் இது ஒன்று தானா ? பல. இவர்கள் இயங்குவதற்கு அமைந்த வழி இது என்றால், பகை ஏழு கடலினும் மிகுதியாகும். எதிர்ந்தால் -ஒன்று கூடினால் (சந்தித்தால்) மக்களை நேருவார் - எதிர்ந்தார்கள்' (கம்ப. 1938). யாவையும் - ஐ - அசை (உருபன்று) புகழான் விளக்கினான் என்பதை (சிந்-2605) புகழானை விளக்கினான் - என்று தேவர் அமைத்தார். ஐ - சாரியை என்றார், இனியர் - (சிந்-2605) (67) |