4910. | எட்டுத்தோளாள், நாலு முகத்தாள்; உலகு ஏழும் தொட்டுப் பேரும்சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்; முட்டிப்போரில், மூவுலகத்தை முதலோடும் கட்டிச் சீறும்காலன் வலத்தாள்; கமை இல்லாள். |
எட்டுத் தோளாள்- எட்டுத்தோள்களையுடையவளும்; நாலு முகத்தாள் - நான்கு முகத்தையுடையவளும்; உலகு ஏழும் - ஏழு உலகத்தையும்; தொட்டுப் பேரும் - தீண்டி, அதற்கு மேலும் செல்கின்ற; சோதி - ஒளியைப் பெற்ற; நிறத்தாள் - மார்பை உடையவளும்; சுழல் கண்ணாள் - எல்லாப் பக்கத்திலும் சுழல்கின்ற கண்களையுடையவளும்; முட்டிப் போரில் - முட்டி யுத்தத்தில்; மூ உலகத்தை - மூன்று உலகங்களையும்; முதலோடும் கட்டி - உயிருடன் பிணித்து; சீறும் - கோபிக்கின்ற; காலன் வலத்தாள் - யமனின் வன்மையுடையவளும்; கமை இல்லாள் - பொறுமையற்றவளும். எட்டுத்தோள்முதலானவற்றைப் பெற்றவள் முட்டிப்போர் - முட்டியுத்தம் - இப்போரில் எதிரியைப் பிளத்தல் கண்கூடு. அவள் வலிமை - காலன் வலிமை. முதல் - ஆன்மா. (76) |