| 4911. | பாரா நின்றாள், எண்திசை தோறும்; பலர் அப்பால் வாரா நின்றாரோ? என;மாரி மழையே போல் ஆரா நின்றாள்;நூபுரம் அச்சம் தரு தாளாள்; வேரா நின்றாள்;மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள். |
(அவள்) அப்பால் -நீண்ட தூரத்துக்கு அப்புறத்திலே; பலர் வாரா நின்றாரோ- பலர் வந்து கொண்டிருக்கிறார்களோ; என - என்று ஐயங்கொண்டு; எண்திசை தோறும் - எட்டுத் திக்குகளிலும்; பாரா நின்றாள் - நோக்கியவண்ணம் இருப்பவளும்; மாரி மழையே போல் - கார்கால மேகம் போல்;ஆரா நின்றாள் - முழங்கி நிற்பவளும்; அச்சம் தரு - பகைவர்களுக்குஅச்சத்தை விளைவிக்கும்; நூபுரம் தாளாள் - சிலம்பணிந்தபாதத்தையுடையவளும்; வேரா நின்றாள் - கோபித்து நிற்பவளும்; இமைக்கும் மின்னின் - இமைக்கின்ற மின்னலைப் போல; மிளிர் பூணாள் - ஒளிவிடுகின்ற ஆபரணம் அணிந்தவளும். நின்றாள்,முதலானவை, இயல்பைக் காட்டி நின்றன. வேரா நின்றாள் இதிலுள்ள வேரா - சினத்தைக் காட்டும். இமைத்தல் - இடையிட்டுத் தோன்றுதல். (77) |