அனுமனும் இலங்கைத்தேவியும் உரையாடுதல் 4917. | களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம்மூள விளியா நின்றே,நீதி நலத்தின் வினை ஓர்வான், 'அளியால் இவ்ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்; எளியேன்உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு ?' என்றான். |
நீதி - நீதியுடன்ஒன்றுபட்ட; நலத்தின் வினை - நன்மையின் பயனை; ஓர்வான் - அறிந்தவனும்; களியா - செருக்கடையாத; உள்ளத்து அண்ணல் - உள்ளத்தைப் பெற்றவனுமான அனுமன்; மனத்தில் கதம்மூள - கோபத்தீ மூண்டு எரிய; விளியா நின்று - (அதனை) அழித்து (இலங்கைத் தேவியைப் பார்த்து); இ ஊர் - இந்த ஊரை; நலத்தால் - இந்நகரின் அழகால்; காணும் அளியால் - காணவேண்டும் என்னும் ஆசையால்; அணைகின்றேன் - அடைந்துள்ளேன்; எளியேன் - பலமில்லாத யான்; இங்கு உற்றால் - இவ்விடத்தை அடைந்தால்; உனக்கு இழவு யாது - உனக்கு நேரும் நட்டம் யாது; என்றான் - என்று அமைதியாகப் பேசினான். இவ்வூர், நீதிநலத்தின் வினை ஓர்வான் - அணைகின்றேன் என்று ஒரு தொடராக்கி இந்த ஊரின் நீதியையும் அழகையும் ஆராய வந்துள்ளேன் என்று உரை கூறுவதும் நன்றே. நலத்தால் -இன்பத்துடன் - நல் எண்ணத்தால் (அண். பல்கலை பதிப்பு) (83) |