4918. | என்னாமுன்னம், 'ஏகு' என, ஏகாது, எதிர்மாற்றம் சொன்னாயே ? நீயாவன் அடா ? தொல்புரம் அட்டான் அன்னாரேனும்அஞ்சுவர், எய்தற்கு;அளியுற்றால் உன்னால் எய்தும்ஊர்கொல் இவ்ஊர், என்று, உறநக்காள். |
என்னா முன்னம் -என்றுஅனுமன் கூறுவதற்கு முன்னே; (இலங்கைத்தேவி அனுமனை நோக்கி) ஏகு என - நான், 'போ' என்று கட்டளையிடவும்; ஏகாது - போகாமல்; எதிர் மாற்றம் சொன்னாயே - எதிர் மொழி பேசுகிறாயே; அடா - அற்பனே; நீ யாவன் - நீ யார்?; தொல் - பழமையான; புரம் அட்டான் அன்னாரேனும் - முப்புரம் எரித்த சிவபிரான் போன்றவர்களும்; எய்தற்கு - என்முன் வருவதற்கு; அஞ்சுவர் - பயப்படுவார்கள் (அப்படியிருக்க); அளி உற்றால் - ஊரைக் காண வேண்டும் என்னும் ஆசை உனக்கு வந்தால்; இவ் ஊர் - இந்த இலங்கை; உன்னால் எய்தும் ஊர்கொல் - உன்னால் அடையத்தக்க எளிய ஊரா? என்று - என்று கூறி; உற நக்காள் - மிகுதியாகச் சிரித்தாள். எய்துதற்கு -(இந்த நகரை) அடைய என்னும் பொருள் கூறப்பெற்றது. (84) |