| 4919. | நக்காளைக்கண்டு ஐயன் மனத்து ஓர்நகை கொண்டான்; நக்காய்,நீயார் ? ஆர்சொல வந்தாய் ? உனது ஆவி உக்கால் ஏதுஆம்? ஓடலை ? என்றாள் இனி இவ்வூர் புக்கால் அன்றிப் போகலென் என்றான் புகழ் கொண்டான். |
ஐயன் - ஒப்பற்ற அனுமன்;நக்காளைக் கண்டு - சிரித்த இலங்கைத் தேவியைப் பார்த்து; மனத்து - உள்ளத்துக்குள்ளே; ஓர் நகை கொண்டான் - சிரித்துக் கொண்டான்; (அப்போது இலங்கைத் தேவி ஐயனைநோக்கி) நக்காய் - (அடே நீ) என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்தாய்; நீ யார் - நீ யாவன்; யார் சொல வந்தாய் - எவர் கட்டளையிட வந்திருக்கிறாய்; உனது ஆவி - உன்னுடைய உயிர் (என்னால்); உக்கால் ஏது ஆம் - அழிந்தால் (உனக்கு) பயன் யாது?; ஓடலை - அடே ! ஓடிப் போக மாட்டாய்; என்றாள் - என்று கூறினாள்; (அப்போது) புகழ் கொண்டான் - புகழ் பெற்ற அனுமன்; இனி - இப்போது; இ ஊர் புக்கால் அன்றி - இந்த நகருக்குள் நுழையாமல்; போகலென் - (திரும்பிச்) செல்ல மாட்டேன்; என்றான் - என்று கூறினான். இனி - இப்போது;இனி நினைந்து இரக்கம் ஆகின்று (புறம்) இனிமேல் என்று அதற்குப் பொருள் கூறுவது நன்றேல் கொள்க. புக்கு - ஆல் - புகுந்தால் (நுழைந்தால்) ஆல் - எதிர்கால வினை எச்ச விகுதி. உருபு அன்று. (85) |