இலங்காதேவிஅனுமனுடன் பொருதல்

4920.

வஞ்சங்கொண்டான்;வானரம் அல்லன்; வருகாலன்
துஞ்சும், கண்டால் என்னை;இவன் சூழ்திரை ஆழி
நஞ்சம் கொண்டகண்ணுதலைப் போல் நகுகின்றான்
நெஞ்சம் கண்டே,கல்என நின்றே, நினைகின்றாள்.

     வருகாலன் -(என்பால்) போர்க்கு வரும் யமன்; என்னைக் கண்டால்
-
என்னைப் பார்ப்பானேயானால்; துஞ்சும் - இறப்பான் (அப்படியிருக்க);
இவன் -
இந்த  அற்பன்; திரை சூழ் ஆழி -  அலைகள் சூழ்ந்த கடலில்
தோன்றிய; நஞ்சம் கொண்ட - விடத்தை உணவாகக் கொண்ட;
கண்ணுதலைப் போல் -
சிவபெருமானைப் போல்; நகுகின்றான் -
சிரிக்கின்றான்; (ஆதலால்) வஞ்சம் கொண்டான் - வஞ்சகம் உடைய இவன்;
வானரம் அல்லன் -
குரங்கு அல்லன்; என - என்று (ஆராய்ந்து); நெஞ்சம்
கண்டே -
அனுமன் கருத்தை யறிந்து பார்த்த அளவிலே; கல் என நின்று -
கல்போல் நின்று; நினைக்கின்றாள் -  கவலையடைந்தாள்.

    என்னையறியாமையால் போர்க்கு வரும் யமன், என்னைக் கண்ட
மாத்திரத்தில் இறப்பான். அங்ஙனம் இருக்க, இவன் என்னைக் கண்டு
சிவபிரான் போல் சிரிக்கிறான். இவன் குரங்கு அல்லன் என்று ஆராய்ந்து
மலைபோல் நின்றாள்.

     எமன் என்னைக்கண்டு பயப்படுவான். இவன் எமனையும் அழித்த
சிவபிரானே என்று கருதினாள்.

     நெஞ்சம் கண்டேகல் என நின்றே என்பதை அவ்வாறே வைத்துப்
பொருள் செய்தல் 'பாவம்' என்னும் கவிதை நலத்துக்குத் துணையாகும்.

     கண்டு + ஏ எனப்பிரித்து, ஏகல் எனக் கூட்டிப் பொருள் செய்தலும்
ஒன்று.  ஏகல் - உயர்ந்த மலை - ஏகல் வெற்பன் என்னும் தொடர் சங்க
நூல்களில் காணலாம். ஏகல் வெற்பன் (குறுந் 265 நற்றிணை 116 அகம் 52)
கண்டு + ஏ என்று பிரித்து 'ஏ' யை அசை ஆக்கினர். ஏற்பின் கொள்க.
நினைவு - நினைவுடைச் சொற்கள் (கம்ப. 5255, சிந்தாமணி. 333) நினைவு -
எண்ணம் என்று பொருள் கொண்டோர் பட்ட இடர்ப்பாடு பெரிது. ஏ - கல்
எனப் பிரித்தல் வலிந்து செய்தலாகக் கருதுவார் ஏற்பன கொள்க.      (86)