4924.

வழங்கும்தெய்வப் பல்படை காணாள்,
                             மலைவான்மேல்
முழங்கும் மேகம்என்ன முரற்றி முனிகின்றாள்-
கழங்கும் பந்தும்குன்றுகொடு ஆடும் கரம் ஓச்சித்
தழங்கும்செந்தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள்.

     தகவு இல்லாள் -நற்பண்புஅற்ற இலங்கைத் தேவி; வழங்கும் -
பகைவர் மேல் எறியும்; பல்தெய்வப் படை - பலவிதமான தெய்வீகப்
படைகள்; காணாள் - சிதறிய இடங்களை அறியாமல்; வான்மலைமேல் -
வானம் அளாவிய மலையின்மேல்; முழங்கும் - இடிக்கின்ற; மேகம் என்ன -
மேகத்தை ஒப்ப; முரற்றி - கர்ச்சித்து; முனிகின்றாள் - சீற்றங்கொண்டு;
குன்று -
மலைகளை; கழங்கும் பந்து கொடு - கழற்சிக் காய்களாகவும்
பந்துகளாகவும்  பாவித்துக்  கொண்டு;  ஆடும் - விளையாடுகின்ற; கரம்
ஓச்சி -
கைகளை உயரத் தூக்கி; தழங்கும் செந்தீ - முழங்குகின்ற தீயானது;
சிந்த -
சிதறும்படி; (அனுமனை) அடித்தாள் - தாக்கினாள்.

     அமைதியானமலையில் மேகம் இடிப்பதுபோல் அனுமனை இலங்கைத்
தேவி அடித்தாள். மலை, வான் - வான் மலை எனக் கூட்டுக. வானத்தில்
முழங்கும் மேகம் என்று சிலர் உரை கூறின் ஆய்க. மழைவான்மேல் என்று
பாடம் கொண்ட வரும் உளர்.                                  (90)