4928.

எத்தனைகாலம் காப்பென்
     யான் இந்தமூதூர் ? என்று,
முத்தனை வினவினேற்கு,
    'முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம்அதனால் தீண்டிக்,
     காய்ந்தஅன்று, என்னைக் காண்டி;
சித்திர நகரம்,பின்னை
     சிதைவதுதிண்ணம்' என்றான்.

     யான் - நான்; இந்தமூதூர் - இந்தப் பழமையான இலங்கையை;
எத்தனை காலம் காப்பென் -
எவ்வளவு காலம் பாதுகாப்பேன்; என்று -
என்று; முத்தனை வினவினேற்கு - வினைகளைக்கடந்தபிரம்ம தேவனை
வினாவிய என்னிடம்; (அந்த முத்தன்) முரண் வலி - பெரு வலி பெற்ற;
குரங்கு ஒன்று -
 ஒரு குரங்கு; உன்னை - (இலங்கைக் காவலை
மேற்கொண்ட) உன்னை; கைத்தலம் அதனால் தீண்டி- தன்னுடைய கைகளால் தொட்டு; காய்ந்த அன்று - சினம் கொண்டகாலத்தில்; என்னைக்
காண்டி -
என்னைப் பார்ப்பாய்; பின்னை - பிறகு;சித்திர நகரம் - அழகிய
இலங்கை நகரம்; சிதைவது திண்ணம் என்றான் -அழிவது உறுதி என்று
கூறினான்.

    காளிதாசன்பிரம்மதேவனைப் பரம் பொருள் என்பான் (குமாரசம்பவம்)
முத்தன் - பரமன். இராமனை முத்தனார் என்பார் (கும்ப 261)        (94)