4938. | கானகமயில்கள் என்ன, களிமடஅன்னம் என்ன, ஆனனக் கமலப்போது பொலிதர,அரக்கர் மாதர், தேன்உகு சரளச்சோலை தெய்வநீர்ஆற்றின் தெண்நீர், வானவர் மகளிர்ஆட்ட மஞ்சனம்ஆடுவாரை- |
ஆனன கமலப் போது- முகமாகிய தாமரை மலர்கள்; பொலிதர - விளங்கித் தோன்ற (மகிழ்ச்சியுடன்); வானவர் மகளிர் - தேவலோகப் பெண்கள்; தேன் உகு சரளச் சோலை - தேன்சிந்தும் தேவதாரு சோலையில்; தெள்நீர் - தெளிந்த தண்ணீரால்; ஆட்ட - நீராட்ட; கானக மயில்கள் என்ன - காட்டு மயில்கள் போலவும்; தெய்வநீர் ஆற்றில் - (ஆகாய) கங்கையாற்றில்; ஆட்ட - நீராட்ட; களிமட அன்னம் என்ன - களிப்பும் இளமையும் பெற்ற அன்னம் போலவும்; ஆடுவார் - நீராடுகின்ற; அரக்கர் மாதரை - அரக்கப் பெண்களையும். நீராட்டும்தேவமகளிர் மலர்ந்த முகத்துடன் பணி செய்கின்றனர் என்பதை விளக்க கமலப் போது பொலிதர என்றான். இவ்வடை மொழி அரக்கியர்க்கு அமையாமையை அறிக. சோலையில் மயில் போலவும், ஆற்றில் அன்னம் போலவும் நீராடினர். மயில்கள் போலவும், அன்னம் போலவும் சோலையில், ஆற்றில் ஆட்ட ஆடும் அரக்கியரை - என்று பொருள் கூறுவர்.104முதல் 121 ஆம் பாடல் வரை ஒரு தொடர் இரண்டாம் வேற்றுமை 'ஐ' கண்டார் என்பதை அவாவும். (104) |